கவர்னர் உரையுடன் 1-ந் தேதி சட்டசபை தொடக்கம்: மார்ச் 8-ந் தேதி மராட்டிய பட்ஜெட் அஜித்பவார் தாக்கல் செய்கிறார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 Feb 2021 1:04 AM IST (Updated: 26 Feb 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. இதில் 8-ந் தேதி பட்ஜெட்டை துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கல் செய்கிறார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை பட்ஜெட் தொடர் குறித்து முடிவு எடுக்க நேற்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி அனில் பரப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கொரோனா பரவலை காரணம் காட்டி சட்டசபை கூட்டத் தொடர் நாட்களை குறைக்க அரசு முயற்சிப்பதாகவும், எனவே அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். 

கூட்டம் முடிந்த பிறகு மந்திரி அனில் பரப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 6 மற்றும் 7-ந் தேதி சட்டசபைக்கு விடுமுறை. 
முதல் நாளில் கவர்னர் உரையாற்றுகிறார். 2 மணி நேர அவரது உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது. மேலும் முதல் நாளில் துணை மானிய கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். 

2-ந் தேதி கவர்னர் உரை மீது விவாதம் நடைபெறும். அடுத்த 2 நாட்கள் துணை மானிய கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படும். எதிர்க்கட்சியினரின் தீர்மானங்கள் மீது 5-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். சட்டசபை கூட்டத் தொடரில் சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது.  8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  

அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறி உள்ளார். ஆனால் அவர் வெளிநடப்பு செய்ததாக கூறுவதற்கு முன்பே அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்து விட்டது. இது தொடர்பாக யார் வேண்டுமானாலும் அலுவல் ஆய்வு குழு கூட்ட நிகழ்வு குறிப்பை சரிபார்த்து கொள்ளலாம். 

கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டும் கூட்டத் தொடரை நடத்த எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் நாங்கள் 10 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார். மார்ச் 6-ந் தேதி (சனிக்கிழமை) 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், அதுபோக பட்ஜெட் கூட்டத் தொடர் மொத்தம் 8 நாட்கள் நடைபெறுகிறது. 

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், நிதி இலாகாவை கவனிக்கும் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதற்காக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.  கொரோனா ஊரடங்கால் வாழ்வாதார பிரச்சினைகளை மக்கள் சந்திப்பதால், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய சலுகைகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

Next Story