மாவட்ட செய்திகள்

தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு + "||" + DMK By coalition Good governance cannot be afforded

தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கோவையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்தவுடன் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து பாரத் மாதாகி ஜே என்று 3 முறை முழங்கினார். 

அதைத் தொடர்ந்து அவர் வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயமுத்தூர், வெற்றி வேல் வீரவேல் என்று தமிழில் பேசி தனது பேச்சை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இப்போது நான் உங்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். செயலாற்றல்மிக்க கொங்கு மக்களுக்கு எனது வணக்கங்கள். இந்த கொங்கு மண் சிறந்த சிந்தையாளர்களையும், அறிஞர்களையும், விடுதலை வீரர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கியது. இந்த பகுதியிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள ஆலயங்கள் இந்தியாவின் மற்ற பிராந்தியங்களில் உள்ள மக்களை சுண்டி இழுத்து வரவழைக்கிறது. 

சிறிது நேரத்துக்கு முன்னர் தான் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டங் களை தொடங்கி வைத்து விட்டு வந்தேன். இத்தகைய திட்டங்கள் நாம் வாழும் வசதிகளை சுலபமாக்கும் என்பதோடு மட்டுமல்ல. தமிழக மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களாகும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் இக்கட்டான கால கட்டத்தில் இந்த தேர்தல் நடக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்திய மக்கள் ஒரு வலிமையான செய்தியை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

வளர்ச்சியை மையப்படுத்துகிற அரசு தான் தங்களுக்கு வேண்டும் என்று மக்கள் பேச தொடங்கி உள்ளனர். அதன்படி செயல்படும் அரசுகள் எல்லாம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுகின்றன. 

நல்லாட்சியை நடத்துகிற கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் நல திட்டங்கள் எழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

வளர்ச்சிக்கு எதிரானவர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், தமிழக அரசும் கூட்டாட்சி தத்துவத்துக்கு இலக்கணமாக செயல்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் பலன் அடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

இதற்கு முன்பு வளர்ச்சி என்பது யார் அதிகம் சத்தம் போடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது. இதனால் சிறிய வியாபாரிகளும், சிறிய விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். 

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்னர் சிறிய வியாபாரிகளுக்கும், சிறிய விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது. கோவையை பொறுத்தவரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை பற்றி பேச விரும்புகிறேன். 

சுய சார்பு பாரதத்திற்கும் தொழில்துறை வளர்ச்சி மேம்படுவதில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அத்தகைய சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது.

அதற்கு உதாரணமாக அரசு உத்தரவாதம் தரும் அவசர கால கடன் உதவி திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பலன்களை அடைந்துள்ளன. கொரோனா பரவலுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள 3½ லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

 அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் பலன் அடைந்துள்ளன.

கடந்த ஆண்டு முதல் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் குறைகளை களை வதற்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்குவதற்கும் இன்னும் அதிக உதவி தேவை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். 

அதனால் தான் அதற்காக அர்ப்பணித்துள்ள சாம்பியன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. சிறு, குறு நடுத்தர தொழில்களின் வழக்குகளை விரைவாக தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 எக்கு பொருட்களின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வரை பழைய இரும்பு பொருட்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அள்ளித் தரும் ஜவுளி தொழில்க ளுக்கு பல்வேறு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஜவுளி தொழிலுக்கான கட்டமைப்பை வலுவடைய செய்துள்ளோம். கடன் அளிப்பது அதிகரித்து எந்திரங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. 

மித்ரா என்ற பெரிய முதலீடுகளுக்கான ஜவுளி பூங்கா திட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. 

தோல் பொருட்கள், ஆடைகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு நடுத்தர தொழில்கள் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சிறு விவசாயிகளுக்காக பாடுபடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். கடந்த 7 ஆண்டுகளில் சிறிய விவசாயிகளின் வளமான வாழ்க்கைக்கும், கண்ணியமான வாழ்க்கைக்கும் மத்திய அரசு உறுதி அளித்து வருகிறது.
அரசு அனுமதிக்காது

 கிசான் கடன் அட்டையில் இருந்து மண் பரிசோதனை அட்டை, பயிர் பாதுகாப்பு திட்டம் வரை விவசாயத் துறையில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 

எந்த நிலையிலும் சிறிய விவசாயிகள் யாரையும், இடைத்தரகர்களையும் சார்ந்திருக்க இந்த அரசு அனுமதிக்காது. அவர்களால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க பல திட்டங்கள் வேளாண் சட்டங்களில் உள்ளன. 

கிசான் கடன் அட்டை திட்டம் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கிசான் விகாஸ் திட்டத்தால் 11 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது பா.ஜனதா அரசு தான். 

அதுமாத்திரமல்ல. கடந்த பல ஆண்டுகளாக கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை இரு மடங்கு அதிகரிக்கப்பட்டது.

பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் நகர்பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் பல நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

ஜல் ஜீவன் என்ற உயிர் நீர் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கலாசாரம் பற்றி நான் பெருமை கொள்கிறேன். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழர்களின் திருவிழாக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை. 

தொழில்நுட்ப கல்வியையும், மருத்துவ கல்வியையும் உள்ளூர் மொழியில் அளிக்க நாம் முடிவு செய்துளளோம். இதனால் எண்ணற்ற இளைஞர்கள் பலன் பெறுவார்கள். 

இந்தியாவில் அதிக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்ட போது அதனால் அதிகம் பலன் அடைந்தவர்கள் ஏழைகள் தான். முழுமையான சுகாதாரத் திட்டம், உடல் நலத்தை காக்க உதவும். 

ஆயுஷ் மான் பாரத் திட்டத்தினால் அதிகம் பலன் அடைந்தவர்கள் ஏழைகள் தான். இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களின் விலை குறைக்கப்பட்டதால் பலன் அடைந்தவர்கள் ஏழைகள் தான்.

இன்று இந்த தேசம் 2 வேறுபட்ட அரசியலை எதிர்நோக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் திறமையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் ஆட்சியை கொண்டு வர விரும்புகின்றன. ஆனால் பா.ஜனதா கட்சி திறமையான நிர்வாகம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை அளிக்க விரும்புகிறது. 

இந்த 2 அரசியலும் பெரும் வித்தியாசமானவை. எதிர்க்கட்சிகளுக்கு என்ன வேண்டும்? தங்கள் சுய லாபத்துக்காக அதிகாரத்தை கைப்பற்றி தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். 

தி.மு.க.வும் காங்கிரசும் நடத்தும் கூட்டங்களில் எப்படி கொள்ளை யடிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு யார் சிறந்த வழியை வகுத்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தங்கள் அரசில் அமைச்சர் பதவி அளிப்பார்கள். 

எதிர்க்கட்சிகளின் அரசியல் என்பது மக்களை துன்புறுத்தும் அரசியல் ஆகும். தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அராஜகம் தலை தூக்கும். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு தொல்லை தரும் சமூக விரோத சக்திகளை அந்த கட்சி வளர்க்கும். இத்தகைய கலாசாரத்தால் யார் அதிகம் பாதிக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் பெண்கள் தான். மறைந்த ஜெயலலிதாவை தி.மு.க. எப்படி நடத்தியது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

யாரெல்லாம் ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தார்களோ அவர்களுக்கெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசும் ஊக்கம் அளித்தன. 
தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நிலவிய மின்சாரவெட்டை நீங்கள் மறந்திருக்க முடியாது. தமிழகத்தில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை யை இழந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டது. 

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் மீண்டும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்த முயற்சித்து முயற்சித்து அதில் தோற்றுப்போய் உள்ளன. 

தி.மு.க.வும் காங்கிரசும் உள் கட்சி விவகாரங்களில் சிக்கி தவிப்பதால் அவர்களால் திறமையான, நல்லாட்சியை தர முடியாது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி பலமான ஒற்றுமையான கூட்டணியாக உள்ளது. 

அந்த கூட்டணியின் நோக்கம் நல்லாட்சி அளிப்பது என்பது மட்டும் தான். தமிழகத்தில் தி.மு.க. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரசும் மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அந்த 2 கட்சிகளும் தேவேந்திர குல வேளாள சமுதாயத்தினரின் கோரிக்கைகள் குறித்து கவலைப்பட வில்லை. 

ஆனால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும் சேர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அனைத்து மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றும். அதே நேரத்தில் தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்படும் கூட்டணியாக உள்ளது. 

எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அவர் பேச்சை முடிக்கும்போது வணக்கம் என்று தமிழில் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில தலைவர் எல்.முருகன் வெள்ளி வேல் பரிசாக வழங்கினார். மோடியின் ஆங்கில பேச்சை பேராசிரியர் சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.

கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜோஷி, கிஷன் ரெட்டி, தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி வானதிசீனிவாசன், துணை தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, இல.கணேசன், கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.