கோவையில் நேற்று 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை


கோவையில் நேற்று 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 26 Feb 2021 2:35 AM IST (Updated: 26 Feb 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட் டம் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவையில் நேற்று 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

கோவை,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட் டம் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவையில் நேற்று 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை. தற்காலிக தொழிலாளர்களை தேர்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. எனவே 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. 

அதன்படி நேற்று காலை முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள சுங்கம், காட்டூர், ஒண்டிப்புதூர், உக்கடம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பஸ் டெப்போக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தில், எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் ஆதரவு தெரிவிக்க வில்லை.

இதனால் கோவை மண்டலத்தில் பணிக்கு வந்திருந்த கண்டக்டர்கள், டிரைவர்களை கொண்டு 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப் பட்டன.மீதி 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை. கோவை காந்திபுரம் பஸ் நிலையம், உக்கடம் பஸ்நிலையம், சிங்காநல்லூர் பஸ்நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

50 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி சிலர் பயணம் செய்தனர். 

கோவை டவுன் ஹால், அரசு தலைமை மருத்துவமனை, சிவானந்தா காலனி, பீளமேடு உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பயணிகள் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

நேற்று முதல்நாள் என்பதால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப் பட்டன. வேலை நிறுத்தம் நீடித்தால் அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறையும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். 

எனவே தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மண்டலத்தில் வழக்கமாக 867 அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட் டத்தை தொடர்ந்து பெரும்பாலான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் விபரங்களை கேட்டு உள்ளோம்.

 அந்த பட்டியலில் இருந்து தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்ய கோவை மண்ட லத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் கொண்ட 3 குழுக்கள் நியமிக் கப்பட்டு உள்ளது. இந்த குழு, அரசு பஸ்களை இயக்க தகுதியான நபர்களை தேர்வு செய்யும். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். தற்போது கூடுதலான தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.  எனவே இனிவரும் காலங்களில் வேலைநிறுத்த போராட்டம் தீவிரப்படுத்தப் படும். தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அனுபவம் இல்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story