அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பெரம்பலூரில் அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
4-வது நாளாக போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 22-ந்தேதி அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று அவர்களின் காத்திருப்பு போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை கலந்து கொண்டு பேசினார்.
கண்ணில் கருப்பு துணி கட்டி...
அப்போது நூதன போராட்டமாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியால் கட்டி, தங்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 38 ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மட்டுமல்லாமல், பிற அரசு துணை பணிகளையும் செய்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும், என்றும் கோஷங்களை எழுப்பினர்.
ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
போராட்டத்தின்போது வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுக்கூர் அங்கன்வாடி ஊழியரான, அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மனைவி செல்வாம்மாள் (வயது 30) திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட சக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story