பெரம்பலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பெரம்பலூரில் 25 சதவீத அரசு பஸ்களே இயங்கின.
பெரம்பலூர்:
காலவரையற்ற வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தக்கோரியும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க மறுப்பதை கண்டித்தும் பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
பெரம்பலூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் மொத்தம் 96 பஸ்களில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நேற்று 25 சதவீத பஸ்களே இயங்கியதாக, பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மற்ற பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிக பயணிகள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பெரம்பலூரில் காலையில் ஒன்றாக கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு காலை நேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால், அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கிராமப்புற பகுதிகளுக்கு காலை நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளும், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகளும், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக பஸ்சை நம்பி, பஸ் நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களில் பலர், வாடகை கொடுத்து கார், வேன், ஆட்டோக்களில் சென்றதை காணமுடிந்தது. சில பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தனியார் பஸ்கள்
ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. அந்த பஸ்களிலும் வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரத்தில் பெரம்பலூர் வழியாக சற்று அதிகமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கழகம் முன்பும், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story