ஆர்.கே.பேட்டை அருகே, பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது


ஆர்.கே.பேட்டை அருகே, பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 5:30 AM IST (Updated: 26 Feb 2021 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு, 

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பஸ் டெப்போவில் இருந்து 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று காலை திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை அருகே மகன் காளிகாபுரம் என்ற கிராமத்திற்கு ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை கண்ணய்யா (வயது 50) ஓட்டி சென்றார். கண்டக்டராக உமாபதி (45) பணியாற்றினார். இந்த பஸ் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் இருந்த டாஸ்மாக் கடை அருகே பஸ்சுக்கு முன்புறம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பஸ் மீது கற்களை சரமாரியாக வீசினார்கள். 

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. இதில் காயம் அடைந்த பஸ் டிரைவர் கண்ணையா அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கண்ணையா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பஸ் மீது கல் வீசியவர்கள் ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கர் (21), காண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த தேவா (22), மேல் மோசூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (23) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story