போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு பஸ் டெப்போ உள்ளது. இங்கு 35 பஸ்கள் உள்ளன. இவை சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லூர், புதுச்சேரி திருச்சி, மற்றும் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊத்துக்கோட்டையில் உள்ள 35 பஸ்களில் நேற்று காலை 11 மணி வரை வெறும் 10 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இப்படி குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஊத்துக்கோட்டை பஸ் டெப்போவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்பட்ட மதுராந்தகம், கல்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு பஸ் டெப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன.
காஞ்சீபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர் உள்ளிட்ட பஸ் டெப்போக்களில் இருந்து குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவள்ளூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் டெப்போ நுழைவாயில் முன்பு போக்குவரத்து பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story