வேலைநிறுத்தம் எதிரொலி 43 சதவீத பஸ்கள் இயக்கம்


வேலைநிறுத்தம் எதிரொலி 43 சதவீத பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:19 PM GMT (Updated: 26 Feb 2021 12:19 PM GMT)

தேனி மாவட்டத்தில் 2வது நாள் வேலைநிறுத்தம் எதிரொலியாக நேற்று 43 சதவீதபஸ்கள் இயக்கப்பட்டன. பணிமனைகள் முன்பு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:

14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

முதல் நாளில் தேனி மாவட்டத்தில் 47 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.


2-வது நாளாக நேற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

 இதனால் நேற்று மாவட்டத்தில் 43 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. 520-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 


தேனி மாவட்டத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து தினமும் 365 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் நேற்று 156 பஸ்களே இயக்கப்பட்டன. 

இதனால், பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இயக்கப்படாத பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


ஆர்ப்பாட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அதன்படி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி, போடி, பெரியகுளம், தேவாரம், கம்பம் 1-வது பணிமனை, கம்பம் 2-வது பணிமனை, லோயர்கேம்ப் ஆகிய 7 பணிமனைகளின் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பழனிசெட்டிபட்டி பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். தேனி கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். 

சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

இதில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஏ.எல்.எல்.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story