விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 6:05 PM IST (Updated: 26 Feb 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சரியான திட்டமிடல் இல்லாததால் இருபோக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 11 மாத இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். இதில் விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-


தேனி மாவட்ட வனப்பகுதியில் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு தாமதமின்றி வழங்க வேண்டும். 

மலைமாடுகள் பாரம்பரிய இனம். அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

 ஆண்டிப்பட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நாகலாபுரம் ஓடையில் ரூ.3 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. 

எனவே, முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தில் இந்த பகுதியையும் சேர்க்க வேண்டும்.


நெல் சாகுபடி பாதிப்பு

அன்னஞ்சி அருகே சிகுஓடை கண்மாய் உருவாக்கப்பட்டு 42 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே நிரம்பி உள்ளது. 

இந்த கண்மாய்க்கு ஆகாச கங்கை ஓடையில் தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முல்லைப்பெரியாறு அணையின் மூலம் பாசன வசதி பெறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இருபோக நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. 

ஒரு போகம் சாகுபடி செய்வதே கேள்விக்குறியாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியபோதும் 2-வது போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று புள்ளி விவரங்களை பின்பற்றாமலும், சரியான திட்டமிடல் இல்லாமல் தண்ணீர் திறப்பதாலும் இருபோக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. 

எனவே, அணையில் தண்ணீரை தேக்கி வைத்து தேவையான அளவு மட்டும் தண்ணீர் திறந்து விட்டு இருபோக நெல் சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாத சூழலை உருவாக்க வேண்டும்.


எரசக்கநாயக்கனூரில் நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஓடைகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து சிலர் தண்ணீர் எடுக்கின்றனர். 

இதை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேனி தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. 

சின்னமனூர் மின்வாரிய அலுவலகத்தில் விவசாய மின் இணைப்புக்கு மனு அளித்தால் முறையான பதில் அளிப்பது இல்லை. விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசுகையில், "கூட்டத்தில் அளித்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த தாமதமும் செய்யக்கூடாது. 

நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களின் கடமை. அதை நிச்சயம் செய்வோம்" என்றார்.


கூட்டத்தில் மேகமலை வன உயிரின காப்பாளர் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story