திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேர் கைது


திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 1:40 PM GMT (Updated: 26 Feb 2021 1:40 PM GMT)

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 4-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார்.

போலீசார் அனுமதி மறுப்பு

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தற்காலிக நிழற்குடைக்காக அங்கு பந்தல் அமைக்க போராட்டக்காரர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் அங்கு உள்ள நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர்.

200 பேர் கைது

ஆனால் அவர்கள் கைதாவதற்கு மறுத்து, பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். அப்போது போலீசார் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பந்தல் அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 200 பேரை கைது செய்தனர். போராட்டம் காரணமாக திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story