பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து


பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து
x
தினத்தந்தி 26 Feb 2021 8:10 PM IST (Updated: 26 Feb 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து.

ஊட்டி

உரிய பயிற்சி பெறாமல் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பயிற்சி முகாம்

வேளாண் துறையின் தர கட்டுப்பாடு பிரிவு சார்பில் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம், ஊட்டியில் உள்ள தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

பயிற்சியை தோட்டக்கலை துணை இயக்குனர் சிவசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். நீலகிரி முழுவதும் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் 40 பேர் கலந்துகொண்டனர்.
இதில் உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) ஜாகிர் நவாஸ் பேசும்போது கூறியதாவது:-

உரிமம் ரத்து

நீலகிரியில் 200-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் உள்ளனர். இதில் 40 பேர் பூச்சிக்கொல்லி மருந்து விற்பதற்கான சான்றிதழ் பெறவில்லை. கால அவகாசம் கொடுக்கப்பட்டும் உரிய பயிற்சி பெறாததால், தற்போது 12 நாட்கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

பூச்சிக்கொல்லி மருந்தின் விஷத்தன்மை, எவ்வளவு பயன்படுத்த வேண்டும், தெளிக்கும் முறைகள் குறித்து விற்பனையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சில மருந்துகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டர் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்த்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படும்.

நீலகிரி மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்பவர்கள் கட்டாயம் சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனையாளர்கள் இந்த பயிற்சியை பயன்படுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்

தொடர்ந்து பூஞ்சாணக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் வகைகள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் விற்பனையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

6 நாட்கள் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்த பயிற்சியும், மேலும் 6 நாட்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கமும் அளிக்கப்படுகிறது. 

முடிவில் ஐதராபாத்தில் உள்ள தேசிய பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் சார்பில், பயிற்சி பெற்ற விற்பனையாளர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் பெற்றால் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை ஆய்வாளர் ரோகிணி (தர கட்டுப்பாடு) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story