இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை-கடலூா் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி


இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை-கடலூா் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி
x
தினத்தந்தி 26 Feb 2021 9:54 PM IST (Updated: 26 Feb 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கடலூா் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூா்:

மண் வளத்தையும், நீர் வாழ் உயிரினங்களின் பல்லூயிர் பெருக்கத்தை காக்கவும் மக்கள், அங்கக வேளாண்மைக்கு மாற வேண்டும். அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள், வெங்காயம், கீரை வகைகள் சந்தை விலையில் அதிக லாபம் தரக்கூடியவைகளாக உள்ளன. விவசாயிகள் சில நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் நன்கு மக்கிய தொழுஉரத்தை இட்டு நன்கு மக்க செய்ய வேண்டும். இதனால் மண்ணின் அங்கக தன்மை மேம்படும். மேலும் இத்தொழு உரத்துடன் பயிருக்கு ஏற்ற உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டிரியம் ஆகியவற்றை கலந்து இடுவதன் மூலம் பயிர்களுக்கு எளிதில் சத்துகள் கிடைக்கும்.

பல்வேறு திட்டங்கள்

அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 2020-21-ம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தனி விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் தங்களின் நிலங்களை அங்ககச்சான்று துறையில் பதிவு செய்து, அங்ககச்சான்று பெற்று பயன்பெறலாம்.

ஊக்கத்தொகை

அதன்படி கீரை, கொத்தமல்லி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஊக்கத்தொகையும், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை மற்றும் கொடி வகை பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரத்து 750-ம், அங்கக காய்கறி விவசாய குழுக்கள் அங்ககச்சான்று துறையில் பதிவு செய்து கொள்ள பதிவு கட்டண ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள சிறு, குறு விவசாயிகள் ஊக்கத்தொகை பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை கடலூா் கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி தொிவித்துள்ளாா். 

Next Story