கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


கடலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 10:05 PM IST (Updated: 26 Feb 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கடலூா்:

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் தொழிலாளர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்ததையும், அவர்கள் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் கடலூர் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் விடிய, விடிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

இருப்பினும் போக்குவரத்து தொழிற்சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அரசு பணிமனைகளில் இருந்து பஸ்கள் வெளியே செல்லவில்லை. அனைத்து பஸ்களும் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. அதாவது சுமார் 30 சதவீதம் பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாமம்

இதற்கிடையே தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் கடலூர் போக்குவரத்துக்கழக அரசு பணிமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நெற்றியிலும், வயிற்றிலும் நாமம் அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பெரும்பாலான பஸ்கள் மதியத்திற்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிதும் அவதியடைந்தனர். இதன் காரணமாக தனியார் பஸ்கள், ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொதுமக்கள் பாதிப்பு

கடலூர் பஸ் நிலையத்திற்கு அவ்வப்போது வந்து சென்ற தனியார் பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறியதை காண முடிந்தது. இதேபோல் விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளிலும் சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியூர் செல்ல முடியாமல் பெரிதும் அவதியடைந்தனர். 

Next Story