விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
சரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி நாகை அருகே விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
சரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி நாகை அருகே விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் சரபங்கா நிரேற்று திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை கைவிடக்கோரி நாகை அருகே திருக்குவளை தாலுகா மீனம்பநல்லூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கருப்புக்கொடி ஏந்தியவாறு குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் சபாநாதன், இணை செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பஞ்சம்
மேட்டூர்-சரபங்கா நீரேற்று திட்டத்தால், டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் பாலைவனமாகும். காவிரியை நம்பி உள்ள டெல்டா மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வறட்சியில் இருந்து காத்திட சரபங்கா நீரேற்று திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.
டெல்டா மாவட்டங்களில் பேரழிவு
பின்னர் காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை தூர்வாரும் பணியோ, ஆழப்படுத்தும் பணியோ நடைபெறவில்லை. இந்த நிலையில் சரபங்கா திட்டத்தின் மூலம் உபரி நீர் எடுப்பதன் மூலம் காவிரியை மட்டுமே நம்பி வாழ்கின்ற டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். இதனால் கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கும்.
எனவே மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீர் மூலம் நிரம்பிய குளத்தில் இறங்கி சரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து அரசு செவிசாய்க்காத பட்சத்தில் டெல்டா மாவட்டத்தில் மிகப்பெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story