பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் தி.மு.க.வை விமர்சிப்பதா? நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
தான் பிரதமர் என்பதை மறந்து, தரமற்ற முறையில் தி.மு.க.வை விமர்சிப்பதா? என்று நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலம்,
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் தீவனூர் நான்குமுனை கூட்டுச்சாலை அருகில் நேற்று காலை நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்கக்கோரி அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டதோடு அவர்களிடம் நேரிலும் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் பதிலளித்தார். மேலும் மாவட்ட பிரச்சினைகள் குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
‘கிளைமாக்ஸ்’ காட்சிகள்
இன்னும் சில வாரங்களில் இந்த ஆட்சியின் கதை முடியப்போகிறது. இது நம்மைவிட பழனிசாமிக்கு நன்கு தெரியும். அதனால் தான் தினமும் அபத்தமான ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார். இதுவரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பழனிசாமிக்கு, இப்போதுதான் நாம் முதல்-அமைச்சர் பதவியில் இருக்கிறோம், இந்த நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்டு போகவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, என்று உணர்ந்துள்ளார்.
கல்வெட்டுக்களைத் திறந்து கொண்டு இருக்கிறார். 2 மாதத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியாது. பதவியைக்காலி செய்வதைத் தவிர வேறு எதற்குமே நேரமில்லை இப்போது.
கடன் வாங்கி கடன் வாங்கி தமிழ்நாட்டின் கடன் தொகையை ரூ.5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசுதான் இந்த பழனிசாமி அரசு. தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டுப் பக்கமாக அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் வரப்போவதால் இனி அடிக்கடி வருவார் என்று நான் சில வாரங்களுக்கு முன்னால் சொன்னேன். அதே மாதிரிதான் அவரும் வருகிறார்.
மோடிக்கு கண்டனம்
கொட்டும் பனியில் 90 நாட்களைக் கடந்தும் போராடும் விவசாயிகள் மீது கொஞ்சமும் இரக்கம் பிறக்காத பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வேளாண்மையைக் காக்க வந்த நவபுருஷரைப் போல பேசிவிட்டு போயிருக்கிறார்.
தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து தரமற்ற முறையில் தி.மு.க. குறித்து மோடி செய்துள்ள விமர்சனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துபட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள்தான் என்று சொல்லி இருக்கிறார் மோடி. என்ன ஆதாரத்தை வைத்துக் கொண்டு மோடி இப்படி பேசினார்? அவருக்கு தரப்பட்ட புள்ளிவிவரம் என்ன?
அராஜகத்தை பற்றி யார் பேசுவது? 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை. குஜராத்தை விட்டு மோடி டெல்லிக்கு வந்துவிட்டார் என்பதற்காக அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது. 3 வேளாண் சட்டத்தைக் கொண்டு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை துன்பத்தில் தள்ளிய மோடிக்கு தி.மு.க.வை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறதா? இதுவரைக்கும் பல விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். அவர்களது மரணத்துக்கு யார் காரணம்? குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களை நிம்மதி இல்லாமல் ஆக்கியது யார்? அத்தகைய மோடிக்கு தி.மு.க.வை பற்றி பேச உரிமை உண்டா?
ஜெயலலிதா உயிரோடு...
இந்திய நாட்டின் அதிகாரம் பொருந்திய பதவியில் இருக்கும் மோடியே, சமீப காலமாக தமிழகம், புதுவை பா.ஜ.க.வில் சேரும் சிலரது பின்னணி என்ன என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விசாரித்துப் பாருங்கள். வாய்க்கு வந்த வார்த்தைகளால் தி.மு.க.வை விமர்சிப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
‘‘ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா’’ என்று பேசி இருக்கிறார் மோடி. நல்லவேளை இதைக் கேட்க ஜெயலலிதா உயிரோடு இல்லை. மாநிலங்களில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? குஜராத்தை சேர்ந்த மோடியா? என்று ஜெயலலிதா உரக்கக் கேட்டது இன்னும் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எல்லா வகையிலும் பாதாளத்துக்கு போய்விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன், உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததையொட்டி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story