அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:05 AM IST (Updated: 27 Feb 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

காரைக்குடி,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில் வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் முதல் அறிவித்தபடி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிப்படைந்தது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இதில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட போக்குவரத்து பணிமனையில் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன.. இந்நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஏராளமான பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டத்தை கைவிட்டதால் ஒரு சில அரசு பஸ்களும், சில டவுண் பஸ்களும் இயக்கப்பட்டது.
போதுமான அரசு பஸ்கள் இயங்காததால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் முண்டியடித்து சென்று தனியார் பஸ்களில் இடம் பிடித்தனர்.
2-வது நாளாக...
நேற்று 2-வது நாளும் பஸ் போக்குவரத்து தொழிலாளர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றும் பள்ளி மாணவர்கள் தனியார் பஸ்சில் இடம் இல்லாததால் பஸ்சின் மேற்கூரையிலும், சில மாணவர்கள் பஸ் படிக்கட்டியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். காரைக்குடி பஸ் நிலையத்தில் சரிவர அரசு பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையடுத்து தனியார் பஸ்சில் இடம் பிடிக்க பொதுமக்கள் கடும் போட்டி போட்டு கொண்டு ஏறினர். இதுதவிர வெளியிடங்களில் இருந்து தனியார் பஸ்சில் வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல டவுண் பஸ்கள் இயங்காததால் அங்கிருந்து நடந்தே சென்றனர். மேலும் காலை நேரத்தில் வியாபாரத்திற்கு செல்ல இருந்தவர்களும், பல்வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியவர்களும் பஸ்கள் இயங்காததால் வெகுநேரமாக பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மதுரை, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய இடங்களுக்கு தனியார் பஸ்களும், ஒரு சில அரசு பஸ்களும் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்கள் வந்து நின்றதும் ஓடி சென்று பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டனர்.
அரசு போக்குவரத்து கழகத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story