மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 27 Feb 2021 1:46 AM IST (Updated: 27 Feb 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மணவாளக்குறிச்சி, 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
மாசி கொடைவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவில் மாசிக் கொடைவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்தமாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
தெலுங்கானா கவர்னர்
தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெறும் சமய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். வெள்ளிமலை ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடக்கிறது. 
ஒடுக்கு பூஜை
விழாவில் வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை, 8-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைக்கப்படுகிறது.
5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story