பரமத்தியில் கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கிரீடம் திருட்டு
பரமத்தியில் கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கிரீடம் திருட்டு
பரமத்திவேலூர்:
பரமத்தியில் கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கிரீடத்தை திருடி சென்ற 3 வாலிபர்கள் பிடிபட்டனர்.
சேத்துக்கால் மாரியம்மன் கோவில்
கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலை பரமத்தியில் சேத்துக்கால் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு காவலாளியாக பரமத்தியை சேர்ந்த கணேசன் (வயது 70) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை கணேசன் கோவில் பகுதியில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அங்கு நின்ற மர்ம நபர்கள் 3 பேர் கணேசனை தாக்கி விட்டு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கருவறைக்கு சென்று அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் நகையையும், வெள்ளி கிரீடத்தையும் திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கணேசன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஒப்படைப்பு
இதனிடையே கீரம்பூர் அருகே சூரக்காம்பாளையம் பிரிவு ரோடு அருகே 3 பேர் மது போதையில் சத்தம் போட்டனர். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீங்கள் யார்? எதற்காக சத்தம் போடுகிறீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு 3 பேரும் பொதுமக்களை தரக்குறைவாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்கள் 3 பேரும் திருடர்களாக இருக்கலாம் என கருதி அவர்களை பிடித்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் சேர்ந்து கோவிலில் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை, வெள்ளி கிரீடம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த சேகர் மகன் ராஜூ (24), வண்டியூரைச் சேர்ந்த அன்பு மகன் முருகுசூர்யா (22) மற்றும் வளையங்குளத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் கருப்பசாமி (23) என்பது தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
=========
Related Tags :
Next Story