கைதான உதவி இயக்குனர் வீட்டில் ரூ.14 லட்சம் 50 பவுன் நகைகள் பறிமுதல்


கைதான உதவி இயக்குனர் வீட்டில் ரூ.14 லட்சம் 50 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Feb 2021 9:35 PM GMT (Updated: 26 Feb 2021 9:35 PM GMT)

கட்டிட திட்ட அனுமதிக்கு லஞ்சம் வாங்கியதாக கைதான உதவி இயக்குனர் வீட்டில் ரூ.14 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்:
கட்டிட திட்ட அனுமதிக்கு லஞ்சம் வாங்கியதாக கைதான உதவி இயக்குனர் வீட்டில் ரூ.14 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உதவி இயக்குனர் கைது 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ஆனந்த். இவர் புதிய பஸ் நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு கட்டிட திட்ட அனுமதி பெற முடிவு செய்தார். இதற்காக தஞ்சை மேரீஸ் கார்னரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து கட்டிட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வழங்குமாறு ஆனந்திடம் உதவி இயக்குனர் நாகேஸ்வரன் கேட்டார். இது குறித்து ஆனந்த் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய நாகேஸ்வரனை கைது செய்தனர்.
ரூ.14 லட்சம், 50 பவுன் நகைகள் 
இதையடுத்து அவரை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். மார்ச் 11-ந் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நாகேஸ்வரன் கும்பகோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து திருச்சி காட்டூர் விக்னேஸ்வர் நகரில் உள்ள நாகேஸ்வரனின் வீட்டில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.14 லட்சம்,, 50 பவுன் நகைகள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி கணக்குகளில் எவ்வளவு தொகை உள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story