சென்னை அயனாவரம் பகுதி சாலையில் கிடந்த மின்வயரை மிதித்தார்; மின்சாரம் தாக்கி டிரைவர் பலி


சென்னை அயனாவரம் பகுதி சாலையில் கிடந்த மின்வயரை மிதித்தார்; மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2021 4:54 PM IST (Updated: 27 Feb 2021 4:54 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் கிடந்த மின்வயரை மிதித்த மினி லோடு வேன் டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

மினி லோடு வேன் டிரைவர்
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 42). இவர், அதே பகுதியில் ஜல்லி, மணல், செங்கல் வினியோகம் செய்யும் மினி லோடு வேன் ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பெரம்பூர் பாக்சர் தெருவில் உள்ள எலக்ட்ரீசியன் சிவா என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணிக்கு தேவையான மணலை தனது லோடு வேனில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை ஜேம்ஸ் மார்ட்டின் அங்கு சென்றார்.

மின்சாரம் தாக்கி பலி
அப்போது சிவா வீட்டின் முன்புறம் உள்ள மின்வாரியத்துக்கு சொந்தமான மின்சார பெட்டியில் இருந்து சிவா வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு இருந்ததாகவும், அந்த வயர் சாலையில் கிடந்ததாகவும் தெரிகிறது. மணல் லோடு ஏற்றி வந்த மினிலோடு வேன் டிரைவர் ஜேம்ஸ் மார்ட்டின் இதை கவனிக்காமல் சாலையில் கிடந்த மின்சார வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரியத்துக்கு சொந்தமான மின்சார பெட்டியில் இருந்து எலக்ட்ரீசியன் சிவா வீட்டுக்கு மின்வாரிய அதிகாரிகளே அலட்சியமாக இதுபோல் மின் இணைப்பு கொடுத்து இருந்தனரா? அல்லது சிவாவே மினவாரியத்துக்கு தெரியாமல் சட்டவிரோதமாக மின்சார பெட்டியில் இருந்து தனது வீட்டுக்கு மின்இணைப்பு கொடுத்து மின்சாரத்தை  திருடினாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story