பணப்பட்டுவாடாவை தடுக்க 13 பறக்கும் படைகள்


பணப்பட்டுவாடாவை தடுக்க 13 பறக்கும் படைகள்
x
தினத்தந்தி 27 Feb 2021 3:44 PM GMT (Updated: 27 Feb 2021 3:44 PM GMT)

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேனி :

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு 4 பறக்கும் படைகள், மற்ற 3 தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள் என மொத்தம் 13 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

அதுபோல், சட்டவிரோதமாக பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மொத்தம் 13 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 4 குழுக்களும், மற்ற தொகுதிகளுக்கு தலா 3 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

பயிற்சி வகுப்பு

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீதம் மொத்தம் 8 குழுக்களும், தலா 1 வீடியோ பார்வையாளர் குழு வீதம் மொத்தம் 4 குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.


இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். 

வாகன தணிக்கை மேற்கொள்வது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வது தொடர்பான புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பது, பறிமுதல் செய்யும் பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறைகள், அதிக அளவில் பணம் சிக்கும் போது வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்பது போன்றவை குறித்து கலெக்டர் பயிற்சி அளித்தார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story