போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று 3 வது நாளாக தொடர்ந்தது. இதனால் போதிய பஸ் வசதி கிடைக்காமல் பயணிகள் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திருப்பூர்:
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று 3 வது நாளாக தொடர்ந்தது. இதனால் போதிய பஸ் வசதி கிடைக்காமல் பயணிகள் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
3 வது நாளாக வேலைநிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் திருப்பூரில் குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டன.
வெளிமாவட்டங்களுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, உடுமலை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், தாராபுரம் பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் நேற்று முழு அளவில் இயக்கப்பட்டன. காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பனியன் நிறுவனத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் போதிய பஸ் வசதியில்லாமல் சிரமம் அடைந்தனர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
55 சதவீத பஸ்கள் இயக்கம்
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் சரிவர பஸ் வசதி கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். முதியவர்கள் தாங்கள் கொண்டு வந்த உடைமைகளை தலையில் சுமந்தபடி திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து கிடைத்த பஸ்களில் பயணிகள் ஏறி சென்றனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டரை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், பழனியில் தலா 2 பணிமனைகள், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலையில் தலா ஒரு பணிமனை என 8 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 226 டவுன் பஸ்கள், 265 தொலைதூர பஸ்கள் என மொத்தம் 491 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாக 112 டவுன் பஸ்கள், 159 தொலைதூர பஸ்கள் என மொத்தம் 271 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. திருப்பூர் மண்டலத்தில் நேற்று 55 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று மாலை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம் போல் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story