கிள்ளை தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்
கிள்ளை தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர்.
அண்ணாமலைநகர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரையில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிமக திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து காளியம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட ஏராளமான சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் இன்று காலை முதல் வரிசையாக கிள்ளை கடற்கரைக்கு வந்தன. கிள்ளை கடற்கரை அருகே உள்ள முழுக்குதுறையில் ஒவ்வொரு சாமிக்கும் தீர்த்தவாரி நடந்தது.
கிள்ளை தீர்த்தவாரியில் சிதம்பரம் நடராஜரின் பிரதிநிதியான சந்திரசேகர சுவாமி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ஆகிய சுவாமிகள் பங்கேற்று தீர்த்தவாரி அளிப்பது வழக்கம்.
பூவராகசுவாமி
அவ்வாறு வரும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு தைக்கால் என்கிற பகுதியில் அங்குள்ள முஸ்லிம்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுப்பது வழக்கம். நேற்று காலை கிள்ளை தைக்கால் தர்கா பகுதிக்கு வந்த பூவராகசுவாமிக்கு உப்பு வெங்கட்ராயர் கட்டளை சார்பில் பரம்பரை தர்கா சையது சக்காப் தலைமையில் முஸ்லிம்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். பின்னர் நடந்த பூஜையிலும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் செயல் அலுவலர் நரசிங்க பெருமாள், கிள்ளை உப்பு வெங்கட்ராயர் கட்டளை செயல் அலுவலர் மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இதனை தொடர்ந்து பூவராகசுவாமி கிள்ளை முழுக்குத்துறைக்கு சென்றார். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்திரசேகரசுவாமி
அதிகாலையிலே நடராஜர் கோவிலில் இருந்து வந்த சந்திரசேகர சுவாமி கிள்ளை முழுக்கு துறையில் தீர்த்தவாரி அளித்து ஊர்வலமாக கிள்ளை கடைத்தெரு வழியாக சிதம்பரம் சென்றார்.
இதனை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஏராளமான சாமிகள் முழுக்குத்துறையில் தீர்த்தவாரியில் பங்கேற்றன. முன்னதாக கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
புதுப்பேட்டை கடற்கரை
பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக திருவிழாவையொட்டி சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் புதுப்பேட்டை, புதுகுப்பம், அகரம், அறியகோஷ்டி, முட்லூர், மஞ்சகுழி, ஆணையம் பேட்டை, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, புதுச்சத்திரம், வில்லியநல்லூர், பெரியப்பட்டு மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடினார்கள். சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.அய்யப்ப சேவசமாஜம் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story