மாடு விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன


மாடு விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
x
தினத்தந்தி 27 Feb 2021 10:42 PM IST (Updated: 27 Feb 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

வடுகசாத்து கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

ஆரணி

வடுகசாத்து கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ராமலிங்க சுவாமிகளின் திருவிழாவும், 40-வது ஆண்டாக காளை விடும் விழாவும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளை விடும் விழா நடைபெற்றது.

 இதில் பங்கேற்பதற்காக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 170 காளைகள் பங்கேற்றன. அவை சீறிப்பாய்ந்து ஓடியதை இரு புறமும் திரண்டிருந்த ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்தனர்.

முதல் பரிசாக கணியம்பாடி பகுதியை சேர்ந்த காளை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரத்தை ஆரணி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் யசோதாசண்முகம் வழங்கினர். இரண்டாம் பரிசு ரூ.45 ஆயிரத்தை வடுகசாத்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அரங்கநாயகமும், மூன்றாம் பரிசை மாவட்ட நுகர்வோர் கூட்டுரவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன் ரூ.40 ஆயிரத்தை வழங்கினார். 4-வது பரிசுத்தொகை ரூ.35 ஆயிரத்ைத முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ். காந்தியும், 5-ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், ஆறாவது பரிசாக ரூ.25 ஆயிரமும் என மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டன.

காளை விடும் விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தரணி, ஷாபுதீன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை  மேற்கொண்டிருந்தனர். இதனையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. 

இரவில் சுவாமி திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.

Next Story