கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 27 Feb 2021 10:56 PM IST (Updated: 27 Feb 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம், 

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் பனி அதிகமாக இருந்தது. அதை காட்டிலும் மார்கழி, தை மாதங்களில் கடுமையான பனிப்பொழிவாக இருந்தது. ஒரு சில இடங்களில் உறைபனியாகவும் காட்சியளித்தது. தற்போது மாசி மாதம் தொடங்கி 2 வாரங்களை கடந்தும் இன்னும் பனிப்பொழிவு குறையவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்கழி மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. தற்போது தை மாதம் முடிவடைந்து மாசி பிறந்து 2 வாரம் ஆகியும் இன்னும் பனிப்பொழிவு குறையவில்லை. மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த பனிப்பொழிவு மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சீரான வேகத்தில் செல்கின்றன.

வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், மயிலம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருவண்ணாமலை, விழுப்புரம்- புதுச்சேரி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் தினமும் காலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு சில பஸ்கள் சிறிது நேரம் சாலையோரம் நிறுத்தப்பட்டு பனிப்பொழிவு குறைந்த பின்பு சென்றதையும் காண முடிந்தது.
மேலும் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிப்பொழிவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் நடைபயிற்சிக்கு செல்வோரின் கூட்டம் சற்று குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சிலர் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி அதன் மூலம் சற்று குளிர்காய்ந்து வருவதையும் காண முடிகிறது.

Next Story