வாக்குச்சாவடி மையம் கைப்பற்றப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்


வாக்குச்சாவடி மையம் கைப்பற்றப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:10 PM IST (Updated: 27 Feb 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி மையம் கைப்பற்றப்பட்டது போன்ற புகார் வரப்பெற்றால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர்

வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி மையம் கைப்பற்றப்பட்டது போன்ற புகார் வரப்பெற்றால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்  நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.

அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம், தேர்தலின் போது அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் செய்யவேண்டியவை குறித்து பேசியதாவது:-

மறுவாக்குப்பதிவு

தேர்தலுடன் கோடை வெயிலும் வர உள்ளதால் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அன்று முன் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். வகுப்பறைகளை காத்திருக்கும் அறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கழிவறை, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் மார்ச் மாதம் 10-ந்தேதிக்குள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும். கூட்டம் நடத்துவது தொடர்பான இடம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும். பெரிய கட்சி, சிறிய கட்சி என பாகுபாடு இருக்க கூடாது. கூட்டம் நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

உரிய ஆவணங்களுடன் ரூ.50 ஆயிரத்து மேல் பணம் கொண்டு செல்லலாம். நகைகள் அதிகமாககொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்குச்சாவடி மையம் கைப்பற்றப்பட்டது போன்ற புகார்கள் வரப்பெற்றால் மறு வாக்குப்பதிவு அந்த மையத்தில் நடைபெறும்.

தனி நபர் குறித்து

அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகளை தூண்டும் வகையில் அறிவிப்புகள் வெளியிட கூடாது. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் இசைத்தல் ஆகியவை செய்யக்கூடாது. பள்ளி கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. 

தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதியுடன் கூட்டம் நடத்தலாம்.
அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிற கட்சியினர் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் இடையூறு செய்யக்கூடாது. 

அரசியல் கட்சி வேட்பாளரின் கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களது சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றி குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் அரசியல் கருத்துக்களுக்காகவும், நடவடிக்கையாகவும் அவர்களுடைய வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தக் கூடாது.

அரசியல் கட்சியினர் தனிநபர் இடத்தில் அனுமதி இன்றி கொடிக்கம்பம் நடுதல் விளம்பரத் தட்டிகள் வைத்தல், சுவரொட்டிகள் ஒட்ட கூடாது.

மது விற்றால் சிறை

கூட்டங்கள் நடத்துவது குறித்து முன்கூட்டியே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். 

ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய பரிசுப்பொருட்கள் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். பிரசாரம் குறித்தும், வேட்புமனுதாக்கல் குறித்தும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். பதுக்கி வைத்து மது விற்பது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள். அதற்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும். 

இவ்வாறு அவர் பேசினார். 

அதைத்தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story