தர்மபுரி நகரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணியில் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணியில் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்டவைகளை தேர்தல் அறிவிப்பு வெளியான குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பதாகைகளை உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும் தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. இந்த பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
உரிமையாளரிடம் அனுமதி
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தால் உடனே அழிக்காவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவினங்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரக பகுதிகளில் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ய சுவர் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி கடிதத்துடன் 3 நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதிபெற வேண்டும். இந்த நடைமுறைகள் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விளம்பரம் செய்யஅனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story