40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன


40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 27 Feb 2021 11:24 PM IST (Updated: 27 Feb 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 வது நாளான நேற்று 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

உடுமலை:
உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 வது நாளான நேற்று 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 25-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை டெப்போவில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மொத்தம் 101 உள்ளன. இதில் 51 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களாகும். 50 பஸ்கள் டவுன் பஸ்களாகும். இந்த 101 பஸ்களில் 86 பஸ்கள் மட்டுமே இயக்கத்தில் இருந்து வருகின்றன. உடுமலையில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வந்து கொண்டுள்ளனர். அவர்கள் மூலம் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்நாளில் மொத்தம் 53 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 2-வது நாளில் மொத்தம் 45 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
எண்ணிக்கை குறைப்பு
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன. நேற்று வெளியூர் செல்லும் பஸ்கள் 15ம், டவுன் பஸ்கள் 21-ம் என மொத்தம் 36 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 
அதாவது சுமார் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். 
பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்ததால் சில நேரங்களில் மத்திய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.
கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்பு
அரசு பஸ்களை கூடுதலாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தற்காலிக தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதன்படி உடுமலை டெப்போவில் நேற்று டிரைவர்கள் பணிக்கு 10 பேரும், கண்டக்டர்கள் பணிக்கு 12 பேரும் வந்தனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகளான புதியதாக பணிநியமனம் செய்யப்படுவதையும், பணியிட மாறுதல் உத்தரவு வழங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர், உடுமலை சட்டமன்றத்தொகுதி தேர்தல் அலுவலரான ஆர்.டி.ஓ, மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

Next Story