வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்
வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆனதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
புதுக்கோட்டை:
போராட்டம் வாபஸ்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி கடந்த 25-ந் தேதி முதல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மொத்தம் 385 பஸ்களில் 280-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து நேற்று காலை 3-ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்றும் காலை 10 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அரசு பஸ்கள் இயக்கம்
இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை 4 மணிக்கு மேல் பணிக்கு திரும்ப தொடங்கினர். புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு டிரைவர், கண்டக்டர்கள் வரத் தொடங்கினர். தங்களுக்குரிய வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை அவர்கள் இயக்கினர்.
இதனால் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடத்தொடங்கின. இதேபோல மாவட்டத்தில் மற்ற பணிமனைகளிலும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
இதற்கிடையில் திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை வந்த ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story