மோட்டார் சைக்கிள் மீது ஆம்னிபஸ் மோதி தந்தை, மகன் பலி
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்னிபஸ் மோதி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.
லாலாபேட்டை
தந்தை-மகன் பலி
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள சிந்தாமணி பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி மலர்விழி (27). இந்த தம்பதிக்கு கர்ஷன் (2) என்ற மகன் இருந்தான். இந்தநிலையில் நேற்று கார்த்திக் தனது மனைவி மற்றும் மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
திம்மாச்சிபுரம் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராதமாக விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக், மகன் கர்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மனைவிக்கு சிகிச்சை
கார்த்திக்கின் மனைவி மலர்விழி படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த மலர்விழியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்குப்பதிவு
இதையடுத்து போலீசார் கார்த்திக், கர்ஷன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவரை மாயனூர் போலீசார் பிடித்து லாலாபேட்டை போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி தந்தை, மகன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story