எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சேலை வினியோகம் செய்ததாக புகார் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. வெளிநடப்பு


எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சேலை வினியோகம் செய்ததாக புகார் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 2:15 AM IST (Updated: 28 Feb 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சேலை வினியோகம் செய்ததாக புகார் தெரிவித்து சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சேலை வினியோகம் செய்ததாக புகார் தெரிவித்து சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 சேலை வினியோகம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக நேற்று அனைத்து கட்சி பிரநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் கலையமுதன், கார்த்திகேயன், அறிவழகன், சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று சேலை வினியோகம் செய்து வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். எனவே, அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தி.மு.க. வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்லாமல் அ.தி.மு.க.வினர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அவர்கள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி தான் வேட்டி, சேலைகளை வழங்கியதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வழங்கவில்லை என்றும் பதில் அளித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. நிர்வாகிகள் கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து தி.மு.க.  நிர்வாகிகள் கலையமுதன், சுந்தரம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகாரிகள் இடமாற்றம்
எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வேட்டி, சேலை வினியோகம் செய்தது தொடர்பாக கலெக்டரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கலெக்டர் கூறினார். 
இதுவரை சேலை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடி தொகுதி முதல்-அமைச்சர் தொகுதி என்பதால் அங்கு நேர்மையாக நடக்காத தேர்தல் நடத்தும் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாக நடத்துவதற்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக கட்சி தலைமையிடம் எடுத்துக்கூறி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story