கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நீர் செறிவூட்டுதல் நின்றுவிடும்.
மேலும் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சமும் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
2-வது நாளாக...
நேற்று முன்தினம் சென்னிமலை அருகே தலவுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக சென்னிமலை அருகே அய்யம்பாளையம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் சி.தங்கவேல் (எக்கட்டாம்பாளையம்), ஏ.பரமேஸ்வரன் (புதுப்பாளையம்), கிருஷ்ணவேணி சிவக்குமார் (பனியம்பள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒருங்கிணைப்பாளர் மு.ரவி, ஊராட்சி துணை தலைவர் செந்தில் மற்றும் அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, எல்லைக்குமாரபாளையம், தோப்புப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், காலிக்குடங்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story