தேர்தல் நடத்தை விதிகள் அமல் எதிரொலி: நெல்லையில் 2-வது நாளாக சுவர் விளம்பரங்கள் அழிப்பு


தேர்தல் நடத்தை விதிகள் அமல் எதிரொலி: நெல்லையில் 2-வது நாளாக சுவர் விளம்பரங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 3:17 AM IST (Updated: 28 Feb 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக நெல்லை மாநகர பகுதியில் நேற்று 2-வது நாளாக சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

நெல்லை, பிப்.28-
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக நெல்லை மாநகர பகுதியில் நேற்று 2-வது நாளாக சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலையே அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. நேற்று 2-வது நாளாக மாநகராட்சி ஊழியர்கள் சுவர் விளம்பரங்களை அழித்தனர். அரசு சுவரில் எழுதப்பட்ட விளம்பரங்களை அழித்ததுடன், ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.
நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர நோட்டீஸ்களும் கிழிக்கப்பட்டன.
தலைவர்கள் சிலைகள் மறைப்பு
மேலும் நெல்லை மாநகரில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டன. நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் விளம்பர சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் அலுவலர்கள் கூட்டம்
இந்த நிலையில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலர்கள் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கண்ணன் தலைமை தாங்கி, ஆலோசனைகள் வழங்கி பேசினார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை ஒட்டி அமைந்துள்ள சின்னங்கள் மற்றும் பெயர் பலகைகளை மறைக்க உத்தரவிடப்பட்டது.
இதையொட்டி வண்ணார்பேட்டை பகுதி சுகாதார அலுவலர் இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர். சிலை பகுதியில் வந்தனர். சிலையை சுற்றியும் அமைக்கப்பட்டுள்ள சின்னத்தை காகிதம் கொண்டு மூடி மறைத்தனர். மேலும் அங்குள்ள கல்வெட்டுகளிலும் பெயர் பலகைகளை மறைத்தனர்.
பெயர் பலகை மறைப்பு
இதுதவிர முருகன் குறிச்சியில் உள்ள இரும்பு நடை மேம்பாலத்தில் உள்ள பெயர் பலகையையும் மறைத்தனர். இதேபோல் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலையை சுற்றி உள்ள சின்னங்கள் மறைக்கும் பணி நடைபெற்றது. தலைவர்களின் சிலைகளை மூடுவது குறித்து உரிய உத்தரவு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story