போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் சாலைமறியல்


போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 Feb 2021 3:40 AM IST (Updated: 28 Feb 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையம் முன் உறவினர்கள் சாலைமறியல்

முசிறி, 
முசிறி அருகே அடிதடி தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து அவருடைய உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அடிதடி தகராறில் ஒருவர் கைது
முசிறி அருகே கீழபச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38) கட்டிடதொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி பாலு (46). கடந்த 23-ந் தேதி கீழபச்சனம்பட்டி கிராமத்தில் அதே பகுதியில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக அரசமரத்தின் குச்சிகளை சேகரித்தபோது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது. 
 இதையடுத்து பாலு தரப்பினர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து இரு தரப்பினர் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மாசிமலை (38) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மாலை மாசிமலையின் மனைவி திலகா மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் முசிறி போலீஸ் நிலையம் முன் சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மாசிமலை கைதுசெய்து சிறையில் அடைத்தது குறித்து முசிறி போலீசார் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 
எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் புகார் கூறினர். பின்னர் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story