நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 30 குழுக்கள் - கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதிக்கு நெல்லை உதவி கலெக்டரிடமும், அம்பை தொகுதிக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டரிடமும், பாளையங்கோட்டை தொகுதிக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளரிடமும், ராதாபுரம் தொகுதிக்கு நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலரிடமும், நாங்குநேரி தொகுதிக்கு நெல்லை மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 3,319 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,506 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான விவிபாட் எந்திரங்கள் 2,653-ம் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்கள் அதிகரித்தால் அதற்கேற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் கூடுதலாக வரவழைக்கப்படும்.
1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி நெல்லை தொகுதியில் 408 வாக்குச்சாவடிகளும், அம்பை தொகுதியில் 356 வாக்குச்சாவடிகளும் பாளையங்கோட்டை தொகுதியில் 389 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 395 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 376 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
கட்டுப்பாட்டு அறை
தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் பெறும் வகையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டறிந்து தடுக்கவும் 15 பறக்கும்படை குழுக்களும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதர கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை 1800 4258373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் 316 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நெல்லை தொகுதியில் 88 வாக்குசாவடிகளும், அம்பை தொகுதியில் 49 வாக்குசாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 109 வாக்குசாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 49 வாக்குசாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 21 வாக்குசாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் நாளில் அனைத்து வாக்குசாவடிகளும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தம் 9,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கூடுதலாக வாகன சோதனைச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் விஷ்ணு கூறினார்.
பின்னர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-
தகுந்த நடவடிக்கை
கடந்த ஆண்டு 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குசாவடிகளில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள், நெல்லை உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, பயிற்சி கலெக்டர் அலர்மேல்மங்கை, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் விஷ்ணு ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறுகையில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் வி.டி.திருமலையப்பன், தி.மு.க. சார்பில் அப்துல் வகாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாஸ்கரன், மோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்துகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் சார்பில் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story