கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Feb 2021 11:15 PM GMT (Updated: 27 Feb 2021 11:17 PM GMT)

கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு,


கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி பகுதியில் அரண்மனை புதூர் உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தனர். 

இதையடுத்து அந்த பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மின் இணைப்பு இன்னும் வழங்கப்படாததால் ஆழ்குழாய் போர்வெல் பயன்பாடின்றி உள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்

 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தாமரைகுளத்தில் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் அமர்ந்து   மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்ற அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் வினு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story