தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 4:47 AM IST (Updated: 28 Feb 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று முன்தினம் மாலை அறிவித்தார். 

அதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதற்கிடையில் பொள்ளாச்சி நகர பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

காந்தி சிலை, பாலக்காடு ரோடு, மகாலிங்கபுரம் வளைவு, பல்லடம் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. 

இதைதவிர வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி தொடர்பாக வைத்திருந்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. அப்போது ஒரு சிலர் அவர்களை முன்வந்து தானாகவே அகற்றினார்கள்.

சுவர் விளம்பரம்

மேலும் கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு, பாலக்காடு ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகளில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயிண்ட் அடித்து அழித்தனர்.

இதை தவிர ஆங்காங்கே தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது உருவபடங்கள் அகற்றப்பட்டன.

 பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டன்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மறைக்கப்பட்டு உள்ளன.

ஆனைமலை, கிணத்துக்கடவு

வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், நோட்டீசுகள் அகற்றப்பட்டன. மேலும் கொடிக்கம்பங்களை சிலர் தானாக முன்வந்து எடுத்து சென்றனர். 

மேலும் ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்களை மறைக்கப்பட்டன. 

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு, தாமரைகுளம், கோவில்பாளையம், அரசம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

மேலும் அரசு அலுவலகங்களில் இருந்த முதல்-அமைச்சர், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஆகியோரது உருவபடங்களும் அகற்றப்பட்டன. இந்த பணியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story