மூளைச்சாவு அடைந்த மதுரை வாலிபரின் இதயம் தானம் 36 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்தது
மூளைச்சாவு அடைந்த மதுரை வாலிபரின் இதயம் தானமாக பெறப்பட்டு ரேலா ஆஸ்பத்திரியில் நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சையில் 36 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை,
மதுரை அருகே நடந்த கார் விபத்தில் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழ்மணி (வயது 21). அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்மணியின் இதயத்தை தானம் கொடுக்க அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, தமிழ்மணியின் இதயம் பிரித்து எடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இதயம் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் கொண்டு வரப்பட்டு, சென்னையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரியில் இறுதிநிலை இதய செயலிழப்புடன் மோசமான உடல்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மறுவாழ்வு
இதற்கான இதய மாற்று அறுவை சிகிச்சையை ரேலா ஆஸ்பத்திரியின் இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் சந்தீப் அத்தாவர் மற்றும் கிம்ஸ் தலைமையிலான குழுவினர் சுமார் 4 மணி நேரம் செய்தனர். மாற்று இதயம் பொருத்தப்பட்ட 36 வயது பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
மதுரை வாலிபரின் இதயத்தால், 36 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மதுரை மற்றும் சென்னையில் உள்ள டாக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை மூலம் இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்திருக்கிறது.
இந்த தகவலை ரேலா ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story