சென்னையில் புதிய பாலங்கள் கட்ட ரூ.260 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கீடு


சென்னையில் புதிய பாலங்கள் கட்ட ரூ.260 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 28 Feb 2021 4:47 AM GMT (Updated: 28 Feb 2021 4:47 AM GMT)

சென்னையில் புதிய பாலங்கள் கட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், தாக்கல் செய்யப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

* 2021-22-ம் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு, செயல் திட்டங்கள் மற்றும் அவைகளுக்கான நிதி, ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டின் வருவாய் ரூ.2,935.26 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,481.83 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ரூ.2,084 கோடியாகவும், மூலதனச்செலவு ரூ.2,438.21 கோடியாகவும் இருக்கும்.

* 2020-21-ம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டப்படி ரூ.3,081.21 கோடியாக இருந்த வருவாய் கணக்கின் வரவுகள், இதே ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.3,201.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் இது ரூ.2,935.26 கோடியாக இருக்கும்.

சொத்துவரி

* 2020-21-ம் நிதியாண்டு வரவு-செலவுத்திட்டத்தில் ரூ.2,815.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இனங்களின் செலவு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.3,582.61 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22-ம் நிதியாண்டில் வருவாய் இனங்களின் செலவு ரூ.3,481.83 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

* 2020-21-ம் நிதியாண்டு சொத்துவரி வரவு-செலவு திட்டத்தில் ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டு, பின்னர் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டதால் ரூ.550 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 2021-22-ம் நிதியாண்டில் இந்த வருவாய் ரூ.600 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் வரி வரவு-செலவு

* 2020-21-ம் நிதியாண்டு தொழில் வரி வரவு-செலவு திட்டத்தில் வருவாய் ரூ.500 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

* மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி வருவாய் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.150 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* நிர்வாக செலவு 2020-21-ம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.112.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் நிர்வாக செலவு ரூ.124.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூலதனப்பணிகள்

* மூலதனப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்காக 2020-21-ம் நிதியாண்டு திருத்திய மதிப்பீட்டில் ரூ.167 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் இந்த செலவினத்திற்கென ரூ.168.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மூலதன வரவுகள் 2020-21-ம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையின்படி திருத்திய மதிப்பீட்டில் ரூ.1,672.45 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் மூலதன வரவு ரூ.2,080 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

* அதேபோல் மூலதன செலவு 2020-21-ம் நிதியாண்டில் ரூ.1,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.2,438.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு பணிகள்

* சாலை பராமரிப்பு பணிகள், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், தமிழக அரசு, மத்திய அரசு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான பணிகளுக்காக சாலை துறையின் கீழ் ரூ.643.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம், பொலிவு நகரத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணி மற்றும் கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.857.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாலங்கள் கட்ட ரூ.260 கோடி

* 2021-22-ம் நிதியாண்டில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகள், பாலங்கள் விரிவுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2020-21-ம் நிதியாண்டில் பரிசோதனைகூட உபகரணங்கள், புகை பரப்பும் எந்திரங்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதார மேம்பாடு தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2021-22-ம் நிதியாண்டில் நவீனப்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் வாங்குதல், மின் ஆக்கிகள் வாங்குதல், மகப்பேறு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் போன்றவைகளுக்காக திட்ட மதிப்பீட்டில் ரூ.1.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பூங்கா பணி மற்றும் இதர பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் திட்டப் பணிகளுக்காக ரூ.73 கோடி 2021-22-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story