மாற்றுத்திறனாளி எரித்து கொலை


மாற்றுத்திறனாளி எரித்து கொலை
x
தினத்தந்தி 28 Feb 2021 3:37 PM GMT (Updated: 28 Feb 2021 3:37 PM GMT)

ராமநாதபுரம் அருகே வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த மாற்றுத்திறனாளியின் உடலை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக அவரின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனைக்குளம், 
ராமநாதபுரம் அருகே வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த மாற்றுத்திறனாளியின் உடலை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக அவரின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி
மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட உடைச்சியார்வலசை அருகில் உள்ள முனுசுவலசை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் நவீன் (வயது1½) என்ற மகனும், காயத்திரி (4) என்ற மகளும் உள்ளனர். 
திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் அவ்வப்போது இவரது மனைவியிடம் தகராறு செய்து வருவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 
மாற்றுத்திறனாளியான இவர் மாதந்தோறும் அரசு பென்ஷன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்லாத நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டும் உதவித் தொகையாக பெற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 
திடீர் தீ
இதைத் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் தனியாக குடிசை வீட்டில் முனியசாமி வசித்து வந்துள்ளார். 
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் அவர் வசித்து வந்த வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. 
குடிசை வீட்டில் தனியாக தூங்கிய முனியசாமி தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.  
தடயங்கள் சேகரிப்பு
மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது முனியசாமி குடிசை வீட்டின் முன் கதவைப் பூட்டிய நிலையில் உள்ளே இருந்த முனியசாமி எவ்வாறு இறந்தார். இது தற்கொலையா அல்லது மர்ம நபர்கள் வீட்டை தீ வைத்து சென்றுவிட்டனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story