தேர்தல் நடத்தை விதிமுறை அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு பதாகைகள் அகற்றம்


தேர்தல் நடத்தை விதிமுறை அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு  பதாகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2021 10:29 PM IST (Updated: 28 Feb 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டன.

புதுக்கோட்டை:
போலீசாருக்கு பணி
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பறக்கும்படையில் நியமிக்கப்பட்ட போலீசாருக்கு நேற்று முதல் பணி ஒதுக்கப்பட்டன. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினருக்கு வாகனங்கள் கொடுக்கப்பட்டன.
சிலைகள் மறைப்பு
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி புதுக்கோட்டையில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று ஈடுபட்டனர். இதில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை துணியால் மூடி மறைத்தனர்.
மேலும் அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் மற்றும் அம்மா வாசகத்தை துணி மற்றும் காதிகத்தால் மறைத்தனர். மேலும் அரசின் நலத்திட்டங்களில் எம்.எல்.ஏ.க்கள் பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்ததையும் துணியால் மறைத்தனர். இதேபோல சுவர் விளம்பரங்களை அழித்தனர். மாவட்டம் முழுவதும் இது போன்ற பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் ஒரு சில இடங்களில் வைத்திருந்த பதாகைகளை தாங்களாகவே முன்வந்து அகற்றினர். சில இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

Next Story