தாத்தாவின் ஈமச்சடங்கிற்கு வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


தாத்தாவின் ஈமச்சடங்கிற்கு வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2021 6:17 PM GMT (Updated: 28 Feb 2021 6:19 PM GMT)

தாத்தாவின் ஈமச்சடங்கிற்கு வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பென்னாகரம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரேஸ். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லட்சுமிபதி (வயது 15). இவன் ஜோதிபுரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் 3 மாதத்திற்கு முன்பு இறந்த தனது தந்தைக்கு ஈமக் காரியம் செய்ய கிரேஸ் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒகேனக்கல்லுக்கு வந்தார். 

அங்கு சடங்கு முடிந்த பின்னர் சாரணர் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமிபதி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து பெற்றோர், உறவினர்கள் சத்தம் போட்டவாறே மாணவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவன் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் லட்சுமிபதி உடலை மீட்டனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தாத்தாவின் ஈம சடங்கிற்கு வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story