இந்திராகாந்தி சிலையை துணியால் மூடியதற்கு காங்கிரசார் எதிர்ப்பு
நாகர்கோவிலில் இந்திரா காந்தி சிலையை துணியால் மூடியதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மணி நேரத்தில் அந்த சிலை மீண்டும் திறக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இந்திரா காந்தி சிலையை துணியால் மூடியதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மணி நேரத்தில் அந்த சிலை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்திரா காந்தி சிலை மூடல்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டு வருகின்றன. அதோடு சுவர் விளம்பரங்களையும் ஊழியர்கள் அழித்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலையை நேற்று ஊழியர்கள் துணியால் மூடினர். தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு சிலையானது மூடப்பட்டது.
மீண்டும் திறப்பு
அதே சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) டெரிக் சந்திப்பில் பிரசாரம் செய்ய உள்ளார். எனவே அவரை வரவேற்க காங்கிரசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலையை அதிகாரி மூடிய விவகாரம் காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்தனர்.
பின்னர் மூடப்பட்ட இந்திராகாந்தி சிலை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் இந்திராகாந்தி சிலையை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த கம்பியில் காங்கிரஸ் கொடி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. எனவே அதையும் சேலையால் அதிகாரிகள் மூடியிருந்தனர். சிலை திறக்கப்பட்டதை தொடர்ந்து கம்பியில் சுற்றியிருந்த சேலையும் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் டெரிக் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.
Related Tags :
Next Story