நாயக்கர் கால குறுநில மன்னரின் நடுகல் கண்டெடுப்பு
விருதுநகர் அருகே நாயக்கர் கால குறுநில மன்னரின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் அருகே நாயக்கர் கால குறுநில மன்னரின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி.ேக. கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது:-
நடுகல்
மதுரையை ஆண்ட நாயக்க மன்னருக்கு கீழ் பல குறுநில மன்னர்கள் இருந்தனர். குறுநில மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கல் நட்டும் வழக்கம் இருந்துள்ளது. இதனை நடுகல் என்று அழைத்தனர்.
இந் நடுகல் வழிபாடு தொன்மையான பண்பாடு எச்சமாகும்.
விருதுநகர் அருகே மருளுத்து, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடுவில் ராமக்கம்மாள் கோவிலில் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால குறுநில மன்னரின் நடுகல் உள்ளது.
நாயக்கர் காலம்
அதில் புடைப்பு சிற்பமாக நடுகல் சிற்பத்தில் அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது வீராசனம் நிலையில் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கியும் வீரன் ஒருவன் ராஜநோக்குடன் அமர்ந்திருக்கும் கோலத்துடன் காணப்படுகிறார்.
இடது கையில் கட்டாரி என்ற கூர்மையான குத்துவாள் மேல்நோக்கிய நிலையிலும், வலது கையில் குதிரையில் கடிவாளத்தை இழுத்து பிடித்தவாறும் அமர்ந்துள்ளார். இவ்வீரனின் தலையில் இடது பக்கம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சருகு கொண்டையும், கழுத்தை ஒட்டியவாறு கண்டிகை என்ற அணிகலனும், இரு புஜங்களில் தோல் வளையமும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்.
முதன் முறை
இந்த வீரனின் மரணத்திற்கு பிறகு அவனின் இரு மனைவியர்கள், சதி என்னும் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் விதமாக இப்பெண்கள் சிற்பம் உள்ளன.
இந்த நடுகல்லில் உள்ள அலங்கரிக்கப்பட்ட குதிரையும், வீரனின் கையில் உள்ள கட்டாரி என்ற வாளும், அந்த வீரரின் பணியாளர் கையில் ஏந்தியுள்ள குடையும் காணும்போது, இத்தகைய அமைப்பு நிலை இவர் இந்தப் பகுதியில் குறுநில மன்னராக இருக்கலாம் என்றும், அந்த காலகட்டத்தில் போர் நடைபெற்று, அந்தப் போரில் அவர் மரணமடைந்து அதற்காக இந்த நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூற்றுக்கு வழிவகுக்கிறது. இந்த மாதிரியான குறுநிலமன்னரின் நடுகல் ஆனது விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த நடுகல்லை காட்டுமராஜா என்ற பெயர் சூட்டி அங்குள்ள தெலுங்கு பேசும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story