சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது -தொல்.திருமாவளவன்


சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது -தொல்.திருமாவளவன்
x
தினத்தந்தி 28 Feb 2021 8:42 PM GMT (Updated: 28 Feb 2021 8:42 PM GMT)

சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்

வாடிப்பட்டி
சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். 
மாநில அரசியல் மாநாடு
வாடிப்பட்டியில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சி மாநில அரசியல் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முத்துக்குமார், குண்டுமலை, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் களஞ்சியம் வரவேற்றார். மாநாட்டில் அகில இந்திய சேர்மன் கங்காதரன், பொதுசெயலாளர் மங்கத்ராம் பஸ்லா, திராவிடர் விடுதலைக்கழகம் கொளத்தூர் மணி, மாநில செயலாளர் செல்லச்சாமி, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திருமாவளவன் பேசியதாவது:- 
அரசியல் சட்டத்தை பாதுகாப்போம், சமூக நீதியை பாதுகாப்போம் என்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் நோக்கமே அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பதே. அம்பேத்கர் என்ற தலைவரின் முயற்சியில் மருத்துவராக, வக்கீல்களாக பல்வேறு படிப்புகளை தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க முடிகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர் அம்பேத்கர். 
பிரிவினைவாதம்
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை விலைக்கு வாங்கி வைத்துள்ளனர். அதனால் தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் சரி என தலையாட்டி ஆதரித்து வருகின்றனர். எம்.பி. என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவிக்க அங்கு செல்லவிடாமல் தடுத்தனர். 
தமிழர்களை விட தைரியமானவர்கள் பஞ்சாப், அரியானா விவசாயிகள். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தியா விற்பனைக்கு என்று பிரதமர் மோடி சொல்லப்போகிறார். சமூகத்தில் பிரிவினைவாதத்தை பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story