சேலம் தெற்கு தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை


சேலம் தெற்கு தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 28 Feb 2021 10:50 PM GMT (Updated: 28 Feb 2021 10:50 PM GMT)

சேலம் தெற்கு தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் தெற்கு தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
தெற்கு தொகுதி
சேலம் தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு தொகுதியில் மொத்தம் 381 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 33 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மண்டல அலுவலர்களின் கீழ் 26 கண்காணிப்பாளர்கள், 264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
வாகன சோதனை
சேலம் மாநகராட்சி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று சீலநாயக்கன்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார், வேன் உள்பட பல்வேறு வாகனங்களை நிறுத்தி எங்கிருந்து வாகனம் வருகிறது? அதில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தனர். 
அப்போது, தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களின் வாகன சோதனையை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வாகன சோதனையிலும் ஈடுபட்டார்.
சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story