நகைக்கடையில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி


நகைக்கடையில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 1 March 2021 4:25 AM IST (Updated: 1 March 2021 4:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நகைக்கடையில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ரூ.4 கோடி நகைகள் தப்பியது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர்.

அப்போது கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டரை மர்ம ஆசாமிகள் வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து இருப்பது தெரியவந்தது. மேலும் அதனருகில் 2 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. உடனே கூடலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு கூடலூர் துணை சூப்பிரண்டு ஜெயசிங், தேவாலா துணை சூப்பிரண்டு அமீர் அகமது, இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், நெப்போலியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, பார்வையிட்டனர். அப்போது அங்கு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரியவந்தது.

நள்ளிரவில் புகுந்த ஆசாமிகள்

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள மணல்மேடு வழியாக நள்ளிரவு 12 மணியளவில் மர்ம ஆசாமிகள் மேல்தளத்தில் உள்ள ஒரு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்ததும், அதற்காக 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் வெல்டிங் எந்திரத்தை கொண்டு வந்து இருந்ததும் தெரியவந்தது. 

மேலும் அவர்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரத்துறையினர் போன்ற உடையுடன் வேடமிட்டு இருந்தனர். மேலும் கொள்ளையடிப்பது பதிவாகாத வகையில் கண்காணிப்பு கேமராக்களை வேறு திசைக்கு திருப்பி வைத்தனர். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

2 தனிப்படைகள்

இந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசார் கூறியதாவது:-
வணிக வளாகத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அந்த கடையில் நகை இருக்கும் அறையின் ஷட்டரை வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து உள்ளனர். 

அதிகாலை 3.30 மணி வரை போராடியும் அவர்களால் ஷட்டரை உடைக்க முடியவில்லை. மேலும் அந்த அறையில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், அதில் தீப்பிடித்து புகை பரவியது. இதனால் பயந்துபோன அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த முயற்சியில் ரூ.4 கோடி மதிப்பிலான 10½ கிலோ தங்க நகைகள் தப்பியது. அவர்கள் விட்டு சென்ற 2 கியாஸ் சிலிண்டர்கள், கடப்பாரைகள், பைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. கடப்பாரையால் சுவரில் துளையிடவும் முயன்று உள்ளனர். 

கண்காணிப்பு கேமராவில் 2 ஆசாமிகள் உருவம் மட்டுமே பதிந்து உள்ளது. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரபரப்பு

இதற்கிடையில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து, கிடைத்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து நகைக்கடையின் உரிமையாளர் அப்துல் காதர் கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கூடலூரில் பிரபல நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story