சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 1 March 2021 4:58 AM IST (Updated: 1 March 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினரிடம் இருந்து பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் போன்றவற்றை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் 24 பறக்கும் படை குழுக்கள், 24 நிலை கண்காணிப்பு குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 24 வீடியோ பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாகன தணிக்கை

தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் 24 மணிநேரமும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கார்கள், சரக்கு வாகனங்கள் போன்றவற்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதேபோல் காளைமாட்டுசிலை, பவானிரோடு, சத்திரோடு, பெருந்துறைரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

Next Story