பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மா தேவியார் கோவில் பவுர்ணமி விழா


பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மா தேவியார் கோவில் பவுர்ணமி விழா
x
தினத்தந்தி 1 March 2021 5:12 AM IST (Updated: 1 March 2021 5:12 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே அடா்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மா தேவியார் கோவில் பவுர்ணமி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே அடா்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மா தேவியார் கோவில் பவுர்ணமி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசி மாத பவுர்ணமி
பவானிசாகர் அருகே தெங்குமரஹடா செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது கெஜஹட்டி. இங்குள்ள ஸ்ரீ ஆதிகருவண்ணராயர் பொம்மா    தேவியார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் உப்பிலிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வ கோவிலாக விளங்குகிறது.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமி அன்று, ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு வந்து, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு கோவிலை சுற்றியுள்ள பகுதியிலேயே சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.  அதன்படி 3 மாநிலங்களில் இருந்தும் நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வர தொடங்கினர். இதைத்தொடர்ந்து அன்று இரவு கோவில் வளாகத்திலேயே தங்கி பூஜைகளை செய்ய வனத்துறை அனுமதி கொடுத்தது.
ஆடு, கோழிகள் பலியிட்டனர்
அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆதிகருவண்ணராயர் மற்றும் பொம்மா தேவியார் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் சமைத்து அங்கேயே சாப்பிட்டனர். இதையொட்டி பவானிசாகர் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் காராச்சிகொரை முதல் கோவில் வளாகம் வரை இருபக்கமும் வனவிலங்குகள் வராதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் பவானிசாகர் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
வசதிகள்
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் மருத்துவ வசதி மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. உப்பிலிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவில் வளாகப் பகுதியில் அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்குதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

Next Story