கல்பாக்கம் அணுமின்நிலைய சுற்றுவட்டார பகுதியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது அறிவிப்பால் கிராம மக்கள் அதிர்ச்சி


கல்பாக்கம் அணுமின்நிலைய சுற்றுவட்டார பகுதியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது அறிவிப்பால் கிராம மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 March 2021 11:42 AM IST (Updated: 1 March 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணுமின்நிலைய சுற்றுவட்டார பகுதியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற அறிவிப்பால் கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனங்களான இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற அமைப்புகள் உள்ளன.

இந்த அமைப்புகளில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மட்டும் அணுவில் இருந்து மின்சாரம் தயாரித்து நாட்டுக்கு வழங்குகிறது. பிற அமைப்புகள் அணுசக்தி குறித்த பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அணுசக்திதுறையில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரை தலைவராக கொண்டு அணுசக்தித்துறை நில ஒதுக்கீட்டு கமிட்டி என்ற ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

இதில் பல்வேறு அணுசக்தி நிறுவனங்களின் இயக்குநர்கள், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருகில் உள்ள கிராமங்களின் தலைவர்கள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு 6 மாதத்திற்கு ஒருமுறை கூடி அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் நலன் கருதி ஆலோசனைகள் மேற்கொள்ளும்.

பத்திரப்பதிவு செய்ய வேண்டாம்

இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலைய எல்லையை சுற்றியுள்ள மாமல்லபுரம் கொக்கிலமேடு, மெய்யூர் சதுரங்கப்பட்டினம், குன்னத்தூர், நெய்குப்பி கடம்பாடி ஆமைப்பாக்கம் புதுப்பட்டினம் உள்பட 14 கிராமங்களில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் கொண்ட இடங்களை பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரும் கல்பாக்கம் நிலா கமிட்டி (கல்பாக்கம் நியுக்ளியர் இன்ஸ்டாலேசன் லோகல் அதாரிட்டி கமிட்டி) செயல் உறுப்பினருமான பரிமளா செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு கடந்த மாதம் 19-ந்தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கல்பாக்கம் அணுமின் நிலைய எல்லையில் இருந்து சுற்றியுள்ள மாமல்லபுரம் கொக்கிலமேடு, மெய்யூர் சதுரங்கப்பட்டினம், குன்னத்தூர், நெய்குப்பி கடம்பாடி ஆமைப்பாக்கம் புதுப்பட்டினம் உள்பட 14 கிராமங்களில் அரசாணையில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் கொண்ட இடங்களை பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் அதிர்ச்சி

இது தொடர்பான அறிவிப்பை திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து வாயலூர் ஊராட்சி முன்னாள் தலைவரும் புதுப்பட்டினம் வணிகர் சங்க துணைத்தலைவருமான அப்துல் உசேன் கூறும் போது:-

கல்பாக்கம் அணுசக்தித்துறையினர் ஆரம்பத்தில் இருந்து கதிர்வீச்சு கிடையாது என்று அறிவித்து வந்த நிலையில் தற்போது கதிர்வீச்சு அபாயம் குறித்து பேசுகின்றனர். நாங்கள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளோம். எந்த தொழிற்சாலையும் இங்கு தொடங்க முடியாத நிலையில் இந்த பகுதி எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story